28.12.11

கவிஞர் யுவனின் இலக்கிய வாழ்வு

  பொத்துவில் புதல்வன்       28.12.11
1964 களில் எம்மிடையே வந்து அருட்கவியென விளங்கி நல்ல காத்திரமான கவிதைகள்,வானொலி நாடகங்கள், கட்டுரைகள் என தமிழ் இலக்கியத் துறைக்கு பெரும்
பங்காற்றி அமரகவியாகிவிட்டார் யுவன் என்பது நமக்கு ஞாபகமிருக்கிறதா?

1935 களில் பொத்துவில் கிராமத்தின் கல்விசார் குடும்பமொன்றில் பிறந்த கவிஞரின் இயற்பெயர் எம் ஏ கபூர் ஆகும். இவர் மட்டக்களப்பு மத்திய கல்லுரியில் கல்வி கற்கும் காலத்தில் கல்லூரியில் வெளியான யுவன் இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று செய்து வந்தார் .தனது கல்லூரியில் வெளியான இதழின் பெயரையே தனது புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.இலக்கியத்தையே (எழுத்துத் துறை) முழு நோக்கமாகக் கொண்ட கவிஞர் அக்கரைப்பற்று அல் முனவ்வரா பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்துள்ளமை வியப்பிக்குறியதாகும்.

200 க்கும் மேற்பட்ட கவிதைகளையும் கிடத்தட்ட 50 நாடகங்களையும் 100 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதிக்குவித்து இலக்கியத்திற்கு அவர் செய்துவிட்டுப் போன நல்ல பனிதான் இன்றும் பொத்துவில் இலக்கியத்துறையில் பெரும் பங்காற்றும் முஹம்மத் மாஸ்ட்ர், கவிஞர் அஸ்மின், தாஜகான்  பொத்துவில் முபா, இல்ஹாமா ஏ சுக்கூர் போன்ற கலைஞர்களை உருவாக்கக் காரணமாய் இருந்தது.

கவிதை பற்றி கவிஞனின் கூற்றும் கவியுலகப் பிரவேசமும்...

கவிஞன் பிறந்து பிறவியிலேயே கவியூற்று அவனுள்ளத்தில் உற்பத்தியாகிறது. கற்பனை வளமும்,கலியுக மக்களின் உள்ளத்துடிப்பை அறியக்கூடிய திறனும் ,எல்லோருடனும் இரண்டறக்கலந்து அவர்களில் ஒருவனாக வாழ்ந்து,அவர்களை வழிநடத்தும் சிந்தனைகளை கவிதையுருவில் தருபவனே எனது நோக்கில் கவிஞனாவான். மக்களை மறவாத கவிஞனுக்கு மனவளம் இருத்தல் வேண்டும். குழந்தையுள்ளம் இருத்தல் வேண்டும், பழமைக்கும் புதுமைக்கும் நல்ல பாலமாக அவன் திகல வேண்டும் .மக்களை மறந்து கவிதை எழுதும் கவிஞனை மக்களும் மறந்து விடுவார்கள்.நாம் ஏன் எழுதுகிறோம்? எவருக்காக எழுதுகிறோம்? என்று கேள்வியோடு, மக்களை மக்களால் மக்களே ஆளும் சுதந்திர தாகம் உலகெங்கும் தலைதூக்கியுள்ள இக் காலகட்டத்தில் கவிஞரின் பணி மகத்தானது.

இவரது உணர்ச்சி மிகுந்த இலக்கிய ஈடுபாடுகள் சமூகப்பார்வையில் வரவேற்பைப் பெறக்கூடியது எனலாம். இலங்கை வானொலி முஸ்லிம் சேவைப்பகுதியில் முதன் முதலாக "அருட்கவி" என்ற கவிநாடகத்தை எழுதி தனது வாசகர்களைப் பெருக்கிக் கொண்டார் எழுத்துத் துறையில் தன்னை முற்றும் முழுதாக அர்ப்பணம் செய்து கொண்ட கவிஞர் யுவனின் கவிதைகள் சொற்செறிவு கொண்டவையாக காணப்பட்டது. சீதனக்கொடுமை,பெண்கள் எழுச்சி, சமுதாயசீர்திருத்தம் பற்றி அழகாக கூறியிருந்தார் தேசிரி,அருட்கவி,சீனத் தியாகத் திருமகள்,வேறு சொர்க்கம் எதற்கு, திருந்தாத இதயங்கள் போன்றவை இவரது வானொலி நாடகங்களுள் சிலவாகும்  .

1957 காலப்பகுதிகலில் அக்கரைப்பற்றில் இயங்கிவந்த மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்து எழுத்தாளன் என்ற கையெழுத்து பத்திரிகைக்கு ஆசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இரவு பகல் பாரது குறித்த வேலையை செய்து முடிப்பது இவரின் இலக்கியப்பணிக்கு பெரும் உதவியாக இருந்தது இவர்  இயற்றிய பாடல்கள் ஒருவித வேகம் கண்டவை உணர்வுக்கொப்பளிப்பு, காதல், சமூகப்பார்வை நிறைந்து காணப்படும் அவர் தனது பாடல்களில் இஸ்லாத்தித்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது கீழ்வரும் பாடலில் புலணாகின்றது

"குத்துவோர் குத்தட்டும் கொடுமை செய்து
கொல்லுவோர் கொல்லட்டும் ஏழை மக்கள்
எத்திக்கும் வாழ்வு பெற்றுத்தவிக்கும் இன்று
இணையற்ற இஸ்லாத்தின் பெருமை போற்றி"

அது மட்டுமல்லாமல் சமூக உணர்வு பெண்ணுரிமை போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.


கவிஞரின் அரசியல் அபிப்பிராயம்......

அரசியல் ஒரு அனுபவசாலிக்குறிய துறை.அரசியலில் அலைமோதும் நாம் நாட்டுப் பற்றை இன்னும் வளர்க்கவில்லையே...தேசிய ஒருமைப்பட்டுக்கு அன்பு நம் உள்ளத்தின் அடித்தளத்தில் வேரூன்றவில்லை...! இது நமது சோதனைக்கும்,வேதனைக்குமுறிய காலகட்டமாகும். உலகமே போராட்ட மயமாகிவிட்டது இந்த பேயாட்டம் -தெய்வத்தளமான நம் இலங்கையிலும் தலை தூக்கியுள்ளதை தவிர்க்க முடியாது. காலமே இதற்கு விடையளிக்க வேண்டும்.

ஏனென்றால் காசு..காசு..என்று வெறிபிடித்து ஆசைக்கு அடிமையாகி அல்லல் படும் உலக மக்கள் அன்புக்கு சாவுமணி அடித்துவருகிறார்கள்,அறிவுக்கு மயான ஊர்வலம் நடாத்துகிறார்கள்.பணம் என்கின்ற மாற்றுப்பொருளை பண்டமாற்று ஆண்ட நாட்களின் குணங்களின் தாயாய்  அன்பைப் பேணி.. குவலயம் அன்று கொடி நாட்டிற்று. பணத்தின் வீக்கம் பெருகப் பெருக குணத்தில்,குலத்தில் அனைத்திலும் இன்று குரோத உணர்வுகள் குன்றாய் உயர்ந்துள்ளன.போர்கள்,புரட்சிகள்,புதுப்புது ஆட்சிகள் பெருகப் பெருக பேதங்கள் ஓங்கின! குருவாய் நம்பி கும்பிடும் கைக்குள் குண்டுகள் வைத்து குறி பர்ப்பதுவும்,ஒரு தாய் ஈன்ற சேய்கட்குள்ளே ஓரவஞ்சம்,உரிமைப் பிழவுகள் பெருகப் பெருக பேதலிக்கிறோம்.கருவுற்றிருக்கும் தாயை கூடக் கண்டதுண்டமாய் வெட்டிடும் காட்சிகள்,கரும்பு திண்ணக் கூலியும் கடவுளுக்கு வேலியும் பெருகுது தம்பி உருகுது உள்ளம் ! என்று உணர்ச்சிவசப்பட்டு  அழுதுகொண்டே கூறியிருக்கிறார்.

கவிஞர் யுவன் ஒரு வித்தியாசமான மனிதர்.கல்வித்தாய் சரஸ்வதியை தன்னுயிராக மதிப்பவர் "நான் ஒரு முஸ்லிம்,என் தந்தை ஒரு முஸ்லிம் ஆனால் என் தந்தை தான் 64 கலைகளையும் ஆட்சிபண்ணும் சகல கலா தேவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்." அவரும் ஒரு "ஹாபிஸ" புதுமையான நோக்கமுடைய புலவர்மணி.இறைவனுடைய அருளில் அவனுடைய ஒளியில் வெளியான வெண்ணிறத் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் ஒரு பெண்ணைக் கனவில் கண்டேன்.அவளே எனக்கு கவிதை தந்தாள் என்று அடிக்கடி கூறுவார். அவருடைய றங்குப்பெட்டிக்குள் சரஸ்வதியின் படத்தை வைத்து அதிகாலையில் எழுந்து அதனோடு ஏதேதோ பேசிக்கொள்வார். யார் வாப்பா இந்த பெண்..,?என்று கேட்டால்,இவள்தான் எனது காதலி (my lover ) (my goddess of education ) என்று கூறி புன்னகை செய்துவிட்டு நீங்களும் இவளை லவ் பண்ணுங்கள் மகன் என்று நகைச்சுவையாக பேசுவதைக்கேட்டு என் உம்மாவும் சிரிப்பதுண்டு என்று கூறியிருக்கிறார் கவிஞர்.

அந்த உணர்வே அன்று யுவனை கவிஞனாக்கியுள்ளது.அசைக்க முடியாத நம்பிக்கை உடையவன் நான் என்று துணிந்து கூறும் போது
கவிஞரின் கண்கள் பாரதியின் கூரிய ஒளி சிந்தியதாக குறிப்புகள் கூறுகின்றன.

காதல் பற்றி கவிஞர் கூறியது......

உடலை இயக்குவது,உயிரை இயக்குவது எது? திடனைத் தந்து  திக்கெட்டும் சென்று தேடச்சொல்லும் சக்தி எது? கடலலை,மலை,நதி,ஆகாயம்,விலையுயர்ந்த தங்கம்,வைரம் இவையெல்லாம் வேண்டும் என்று ஆசையினைத் தூண்டுவது எது? அதுவே காதலாகும். காதல் இல்லாத வாழ்வில் சுவை இருக்காது. எனது வாலிப காலத்தில் காதல் பற்றி நிறைய பாடியிருக்கிறேன்.

"மண்ணுக்குப் பெண்ணென்ற பெருமையுண்டு
மானிலத்தில் மாதாவாய் போற்றுகின்றோம்
கண்ணுக்குள் ஒளியான பெண்னினத்தை
கடைச்சரக்காய் கருதுவது கொடுமையன்ரோ"

இவர் சாதாரனமாக வீட்டில் இருக்கும் போதும் மக்களுடன் புலங்கும் போதும் கவிதை தனமான வார்த்தைகளையே பேசுவார். "அடியே சவர்காரத்தை தேய்க்காதடி சவர்க்காரம் தேய்ந்த்து விடும்" என்று கிணற்றடியில் இருக்கும் தன் மனைவியிடம் அடிக்கடி கூறுவார்.

ஒரு முறை பொத்துவில் சந்தையில் இவரிடம் முறைகேடாக நடந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இவர் யார் என்று அறிந்தபின் இவருக்கு வழங்கிய மரியாதையையும் கௌரவத்தையும் எனது தந்தை இன்றும் நினைவு கூருகிறார்

சாவில் தமிழ் பாடிச் சாக வேண்டும் ! என்
சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும் !
ஓதில் தமிழ் ஓதி ஓய வேண்டும்
உலகெல்லாம் ஒற்றுமையே ஓங்க வேண்டும் !
நாவில் தமிழ் மணமே வீச வேண்டும்-என்
நரம்பெல்லாம் தமிழ் என்றால் துடிக்க வேண்டும் !
காவினிலே பாடையிலே செல்லும் போதும்
என் காதில் தமிழ் ஓசை ஒலிக்க வேண்டும் !

என்று கூறி எம்மையெல்லாம் விட்டு 05.04.1991 இல் உயிர் நீத்தார் கவிஞர் யுவன்    
logoblog

Thanks for reading கவிஞர் யுவனின் இலக்கிய வாழ்வு

Previous
« Prev Post

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

kavinjar youvan pattry aaivu sethu intha aarticali eluthiya palkalikalaha nanpar pottuvil JAHUFER IN name ai pirasurika ean maranthirkal

பொத்துவில் புதல்வன் சொன்னது…

பெயரில்லா நண்பர் உங்கள் பின்னூட்டமும் வினாவும் கண்டதில் சந்தோஷம்.....

இந்த கட்டுரை நண்பர் ஜௌபர்தான் எழுதினார் என்பதினை கூறுவதென்பது தவறு. எங்கள் குழுவினர் சில பல புத்தகங்கள் மற்றும் சில அனுபவசாலிகளிடம் கேட்டு சுருக்கமாக தந்ததுதான் இது.

இதன் பிரதான நோக்கம் எமதூரின் பாரம்பரிய தகவல்களை மின் நூல் வடிவில் கொண்வருவதும் அதனை பலரிடம் கொண்டுசெல்வதும்தான்.

மேலும் இப்பதிவு இத் தளம் ஆரம்பித்த புதிதில் இடப்பட்டதாகும் அப்போது பலரும் பல வேலைகளில் இருந்ததனாலும் தளத்தில் பதிவுகள் இடவேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்ததனாலும் அவர்கள் தொகுத்தெடுத்த புத்தகங்களின் பெயர்கலையும் அதனை எழுதியவர்களின் பெயர்களையும் தர மறந்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.

நிச்சயமாக நீங்கள் சொல்லும் நபரும் ஆய்வு செய்த தகவல்கள் இதில் உள்ளடங்கியிருப்பது எங்களுக்கு அறியக் கிடைக்குமிடத்து அதனை இப்பதிவில் சேர்த்து வெளியிடுவதற்குத் தயங்க மாட்டோம். காரணம் ஆய்வு செய்தவர்கள் எந்தக் காலப்பகுதியில் வாழ்த்தாலும் அவ் ஆய்வுகள் அவர்களுக்கே சொந்தமானது.

மேலும் இத் தளம் நான் முன்னர் க்றியது போன்று எமதூரின் பாரம்பரியத்தினையும் கூறின் அபிவிருத்தி மற்றும் குறைகளை வெளியுலகிற்கும் எடுத்துச் சொல்லுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதாகும்.

நீங்களும் இந்த ஊரைச் சேர்ந்தவராக இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் அப்படியாயின் உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த ஊர் தொடர்பார அறிய மற்றும் பாரம்பரிய தகவல்களியும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பலருக்கு உபயோகமாக இருக்கும்.

மேலும் யாராவது ஏதாவது புது முயற்சி செய்தால் அவரை ஆதரியுங்கள் அவர் விடக்கூடிய சிரைய தவறுகளை நல்ல முறையில் எடுத்துக் கூறுங்கள் அது தவற் என்று சுட்டிக்காட்டாமல் இது இவ்வாறிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று கூறி உற்சாகப்படுத்துங்கள்..

இது வரையும் யாரும் செய்யாத ஒன்றைத்தான் நாம் செய்துள்ளோம் .இதற்கு முதல் கவிஞர் யுவன் பற்றி ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும் இந்த தளத்தின் மூலம் பெரும்பாலாவர்கள் அதனை அறிந்துள்ளார்கள்.

தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்