16.11.11

றஊப் ஹக்கீம் ஊரா கோழி அறுத்து குடும்பத்தின் பெயரிலும் கத்தம் ஓதியவர் – அமீர் அலி

  பொத்துவில் புதல்வன்       16.11.11
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஊரா கோழி அறுத்து உம்மா பெயரில் மாத்திரமல்ல குடும்பத்தின் பெயரிலும் கத்தம் ஓதியவர் என முன்னாள் அமைச்சரும்
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

12.11.2011 அன்று ஓட்டமாவடியில் நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போதே அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார்.


இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் அமீர் அலி கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம் மிறாவோடைக்கு வந்து தபாலக கட்டிடமொன்றை திறந்து வைத்த வைபவத்தில் உரையாற்றியுள்ளார்.


அவரது உரையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ஊரா கோழி அறுத்து உம்மா பெயரால் கத்தம் ஓதாதது என குறிப்பிட்டுள்ளார்.


அவர் ஊரா கோழியறுத்து உம்மா பெயரில் மாத்திரமல்ல குடும்ப பெயராலும் கத்தம் ஓதியவர்.


இலங்கையில் எத்தனை தபால கட்டிடங்களை அமைச்சர் ஹக்கிம் கட்டியுள்ளார். மிறாவோடை தபால கட்டிடத்திற்கு காணி பெற்ற வரலாறு அவருக்கு தெரியுமா என நான் கேட்க விரும்புகின்றேன்.


இப்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்குள்ள வேலை யாரோ கட்டிய கட்டிடங்களை திறந்து வைத்து பெருமிதம் அடைவதுதான்.


இவ்வாறான கருத்துக்களை நான் கூறுவதற்கு அவரின் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஏனெனில் அவர் அங்கு பொறுப்புடன் பேச வில்லை.


ஒரு தலைவர் ஒரு அமைச்சர் பொறுப்புடன் பேசியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் பேச வில்லை.


அரசியல் தலைவர்கள் மத்தியில் நல்லெண்ணம் இருக்க வேண்டும். அதுதான் ஒழுக்கமாகும்.


வாழைச்சேனை மீன் பிடித் துறை முகத்தை தான் துறைமுக அமைச்சராக இருந்த போது அதை நிறுவுவதற்கு காரணமாக இருந்ததாக கூறி முழுப்பூசனிக்காயை சோற்றினுள் மறைக்க அமைச்சர் ஹக்கீம் முற்படுகின்றார் என்பதை நினைத்து கவலையடைகின்றேன். இவ்வாறான வங்குரோத்து அரசியலை அமைச்சர் ஹக்கிம் மேற்கொள்கின்றார்.


வாழைச்சேனை மீன் பிடித்துறைமுகம் மீன்பிடி அமைச்சின் கீழ் உள்ளது என்பது கூட அமைச்சர் ஹக்கீமுக்கு தெரியாது.


வாழைச்சேனை துறைமுக விவகாரத்தில் ஒரு துளி பங்களிப்புக் கூட அமைச்சர் ஹக்கீமுக்கில்லை.


மேற்படி விடயம் தெரியாமல் இவர் அமைச்சரவையில் ஒரு அமைச்சர் அந்தஸ்த்தில் இருப்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது அல்லது இவர் ஒரு சுத்தப்பொய்யனாக இருக்கவேண்டும்.


நான் இன வாதம் பேசியதாகவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.


தான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தின் நியாயமான பிரச்சினையை நியாய பூர்வமாக முன்வைப்பது இனவாதமாகாது என்பதை அமைச்சர் றஊப் ஹக்கீம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.


தான் சார்ந்த இனத்தின் பிரச்சினை நியாயமற்றதாக இருக்குமானால் அதற்காக பேசுவதுதான் இனவாதமாகும்.


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினை உள்ளதை இந்த மாவட்டத்தில் வாழும் அனைத்து சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் பங்கு கொள்ளும் கூட்டத்தில் உரையாற்றாமல் கந்தூரிக்களரிகளில் அல்லது களியாட்ட விடுதிகளிலா பேச வேண்டும் என்றா அவர் விரும்புகின்றார்.


மட்டக்களப்பு மாவட்ட காணிப்பிரச்சினையை இங்குள்ள இரண்டு சமூகங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.


இதை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைவர்களுக்குண்டு.


இதைப்பற்றி பேசுவது ஒரு போதும் இன வாதமாகாது. இந்தப்பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்பு இதைப்பற்றிப் பேசினால்தான் அது இனவாதமாகும்.


இதற்காக நான் பல காலங்ளை செலவு செய்துள்ளேன். அதற்காக அதிக நாட்களை பயன் படுத்தியுள்ளேன்.


மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு காணிப்பிரச்சினை உண்டு என்பதையும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் இதனால் படும் வேதனைகளையும் இந்த நாட்டு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அறிந்து கொள்ளாததது குறித்து வேதனையடைகின்றேன்.


கண்டியில் சிங்ளவனாக, கொழும்பில் முஸ்லிமாக, மட்டக்களப்பில் தமிழனாக நடிப்பதற்கு எனக்குத் தெரியாது நான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தின் நியாயபூர்வமான பிரச்சினையை எங்கு பேசவேண்டுமானாலும் பேசுவேன். இவர் ஒரு நல்ல தலைவராக இருக்க வேண்டும் என்ற நல்லபிப்பிராயத்திலேயே நான் இவற்றைக் கூறுகின்றேன் என அமீர் அலி இதன் போது மேலும் தெரிவித்தார்.
logoblog

Thanks for reading றஊப் ஹக்கீம் ஊரா கோழி அறுத்து குடும்பத்தின் பெயரிலும் கத்தம் ஓதியவர் – அமீர் அலி

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: